ஆதவன் மீண்டும் உதிக்கிறான் அவன் கடைமையை மறவாமல், அது மற்றொரு விடுமுறை நாள், நண்பர்களின் அழைப்பு விளையாட, காலை உணவு உண்ணாமல் விளையாட சென்றேன், காரணம் ஆர்வமல்ல வீட்டில் உணவில்லை என்பதே!
மிதிவண்டியில் வேகமாய் சென்றோம், அது சாகசம் புரிய துடிக்கும் வயது, ஓடும் பேருந்தில் ஏறி இறங்க பயமில்லை, மரங்களில் தொங்க அஞ்சியதில்லை, சாலையில் விளையாட ஆர்வம் அதிகமே! நாங்கள் வாங்கிய வீரத் தழும்புக்கு அளவில்லை, இப்படி எங்கள் உள்ளம் வானில் பறக்கும் பட்டம் போல எங்கும் பறந்து செல்லும்.
வேகமாய் சென்றோம் விளையாட, ஆர்வக்கோளாறு என் நண்பனுக்கு மீண்டும் ஒரு வீரத் தழும்பு வாங்கிக்கொள்ள, யார் தன்னை அழைத்தது என்று தெரிந்துகொள்ள குருதி வேகமாய் அவன் உடலில் இருந்து வெளிவந்தது, நாங்கள் அவசர உதவியை படிக்கவில்லை ஆனால் எங்களுக்கு பழக்கமுண்டு, வேகமாய் செயல்பட்டோம், எனக்கு ஆர்வகோளாறு சற்று அதிகமே, எங்கு சென்றாலும் அமைதியாய் இருக்கமாட்டேன், வேகமாய் திரிந்துகொண்டிருந்த நேரத்தில் கண்ணில் தென்பட்டது 100 ரூபாய் நோட்டு.
சாகசம் புரியும் வயதாக இருந்தாலும் சற்று சிந்திக்கவும் நேரம் இருந்தது, விளையாட்டுத் தனமாக பணத்தை செலவிட மனம் வரவில்லை, வீட்டில் உணவில்லை என்பதை நினைக்க வீட்டிற்கு விரைந்தேன், அன்னையின் அன்பான முகம் என்னை வரவேற்றது, 100 ரூபாய் நோட்டு என் வாழ்வில் சற்று மறக்க முடியாத ஒன்றுதான்.
குறிப்பு: உண்மைக் கதையை மையமாக கொண்டு எழுதப்பட்டது.
No comments:
Post a Comment